கூட்டுறவிற்கான படிப்பினையும், கல்வியும்.

தற்சமயம் “Cooperatives and Socialism – A View From Cuba” என்ற புத்தகத்தை படித்து வருகிறேன். 2011-ல் ஸ்பானிஷ் மொழியில் இது எழுதப்பட்டு பிறகு 2013-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கியூபாவில் புரட்சிக்கு பின் அதிகாரத்திற்கு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு சோசலிசத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று திட்டமிட துவங்கி, சேகுவேரா தொழில்துறையின் அமைச்சாரக பொறுப்பேற்ற பின் அமெரிக்க நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த தொழிற்சாலைகளை தேசிய உடைமையாக அறித்த பின் அவர்கள் முன் இருந்த மிகப்பெரிய சவால் மூலதனத்தின் ஆதிக்கத்தை கடந்து தொழிலாளர்களின் பங்களிப்போடு கூடிய புதிய சமூக உறவு முறைகளை சோதித்து கண்டறிவதே.

அன்று தொடங்கிய அவர்களின் பயணத்தின் ஊடாக இன்று கியூப நாட்டில் கூட்டுறவு முறை எப்படி இருந்து வருகிறது, என்ன மாற்றங்கள் நிகழ வேண்டும், என்ன தவறுகள் நிகழ்ந்துள்ளன, என்னென்ன வரம்புகள் சவாலாக இருந்துவருகின்றன போன்றவற்றை கியூபா உட்பட லத்தின் அமெரிக்க நாடுகளான வெனிசுவேலா, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் படிப்பினைகளிலிருந்தும், பொருளாதார முனைவர்கள், சமூகவியல் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட 20 நபர்கள் குழு இப்புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இப்புத்தகத்திலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் உள்ளது. கூட்டுறவு முறையை தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு குழுவும் கூட்டுறவு பற்றிய ஆழமான புரிதலும், பொருளாதாரம் குறித்த புரிதலும், தாங்கள் இயங்கும் துறையில் நிபுணத்துவமும் பெற்றிருத்தல் மிகவும் அவசியமாகிறது. இம்மூன்று தூண்களில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் கூட்டுறவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்படும். வரலாற்றில் அப்படி எங்கெல்லாம் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன போன்றவையும் இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான கூட்டுறவுகள் பற்றியும், அதில் குறிப்பாக உற்பத்தி சார்ந்த விவசாய கூட்டுறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து (ஏனெனில் இந்தியா போல கியூபாவும் விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நாடுதான்) எழுதப்பட்டுள்ளது. ஆயினும் பொதுவாக கூட்டுறவுகளின் மேலாண்மை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன். எனவே இதிலிருந்து நான் புரிந்துக்கொள்வதை, coopon-ல் இயங்கும் சக தோழர்களுக்கும் இவற்றை கற்பிக்கும் பொருட்டு நான் இங்கே எழுதுகிறேன்.