கூட்டுறவும் ஜனநாயகமும்!

இந்தியாவில் நாம் பின்பற்றுவது பாராளுமன்ற ஜனநாயக முறை. இந்த ஜனநாயக முறையில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலிருந்து நமக்கான ஒரு பிரதிநிதியை தேர்தலில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இதற்கு மற்றோர் பெயர் தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracry). இதுவொரு நேரடியான ஜனநாய முறையல்ல, அதாவது நாம் நேரடியாக முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இல்லை, நம்மை முதன்மைப்படுத்தி செயல்படுவார் என்று ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் நோக்கம் வேறாக இருக்கும், நமக்கு எதிரானதாகவே கூட இருக்கும்.

ஆனால் அவர் எப்படி தேர்வாக முடிகிறது? தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பின் அதனை தேவைப்படும் நேரத்தில் நிறைவேற்றாமல், சுயலாபத்திற்காக நமக்கு எதிரானதாகவும், மூலதனம் அதிகம் படைத்தோருக்கு சாதகமாகவும் அவர் செயல்படுகிறார். 5 வருடத்திற்கு நம்மால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு (அதுவும் ஒடுக்கப்படும்) எந்த வழியும் இல்லாமல் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் மட்டுமே தனித்து இயங்கும் இடத்தில் அது எளிதில் ஜனநாயமற்ற தன்மைக்கு சென்றுவிடும் என்பது நாம் நன்கு உணர்ந்ததே! தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை தான், மாநில அளவிலும் சட்டச்சபை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாநில பிரதிநிதிகளை கேள்விக் கேட்டால் அவர்கள் நடுவண் (மத்திய) பிரதிநிதிகளை கைக்காட்டுவார்கள், அவர்களைக் கேட்டால் இவர்களைக் கைகாட்டுவார்கள். நாம் இவர்கள் மத்தியில் ஒரு கால்பந்தாகி விடுகிறோம். எனவே ஒரு அரசாங்கத்திடம் நாம் வெளிப்படைத் தன்மையை எதிர்ப்பார்க்கிறோம் அப்போது தான் யார்யாரெல்லாம் திருடர்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் மூலதனப் பிரதிநிதிகள் இதிலும் கில்லாடிகள் தான்.

சரி, ஒரு பக்கம் நாட்டையும், மாநிலத்தையும் நிர்வகிக்கும் முறை பெயரளவிலாவது ஜனநாயகம் என்றிருக்க, மறுபுறம் நாம் அனைவரும் பணிக்கு செல்லும் நிறுவனங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகிறது? நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. எப்படி வந்தது? யாரேனும் தேர்ந்தெடுத்தார்களா? இல்லை. தானே உருவாக்கிக் கொண்டது. சரி உருவாகும் போது பணியாளர்கள் இல்லை, எனவே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் ஆளில்லை போனாபோவுது என்றாலும், பணியாளர்களாக நாம் சேர்ந்த பின்னரும் கூட ஏன் அப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் முறை இங்கில்லை?

நாட்டை நிர்வகிக்கும் முறையின் குறுகிய முறை தான் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது என்றால், மாநிலத்தின் குறுகிய வடிவம் ஏன் மாநிலத்திற்குள் இயங்கும் நிறுவனங்களில் இல்லை? இன்னும் சுருக்கமாகக் கேட்டால் நாம் பணிபுரியும் நிறுவனங்களில் நமக்கு ஏன் ஜனநாயக உரிமைகள் இல்லை?

“வேலை செய்கிறாய், அதனால் உண்டாகும் செல்வத்தை விட குறைவான மதிப்புக்கே கூலியும் வாங்குகிறாய். அதை வாங்கிக் கொண்டு போக வேண்டியதுதான் உன் வேலை” என்று மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, அது இன்று மாநில, தேசிய தேர்தல்களிலும், ஓட்டுக்கு பணம் பெற்றுவிட்டு 5 வருடத்திற்கு போராட வேண்டிய நிலைக்குத் தான் நம்மை கொண்டுவந்து விட்டுள்ளது. ஜனநாயகத்தை தலைகீழாக நிற்கவைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினசரி தலையிடும் இடமாக பணியிடம் தான் இருக்கிறது. ஜனநாயகம் என்று ஏட்டளவில் இருந்து என்ன பயன்? அதை தினசரி வாழ்வியலில், வசிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் என எல்லா தளங்களிலும் பயிற்சி செய்தால் தானே அதை மக்கள் முதலில் புரிந்துக்கொள்ள முடியும்? புரிந்துக் கொண்டால் தானே அதிலுள்ள சாதக பாதகங்களை உணர முடியும்? அப்போது தானே மாநிலத்திலும், தேசிய அளவிலும் ஜனநாயகத்தை மக்கள் கையிலெடுக்க முடியும்? இவை இல்லாம இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போலிப் பெருமை நமக்கெதற்கு? இங்கு இருப்பது போலி ஜனநாயகம், மூலதனத்தின் கட்டற்ற செய்லபாடு.

அது நிர்வாகத்திற்கு மட்டும் கேடல்ல, ஒட்டுமொத்த இயற்க்கைகும் கேடாகிறது, நம் இருத்தலையே அது கேள்விக்குள்ளாகுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இயற்கையிலிருந்து தான் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை எடுக்கிறது. இந்நிறுவனங்கள் இவற்றை எடுக்கும் முன் அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும். அதான் அரசாங்க பிரதிந்திநிகள் யாருக்கு சாதகாமாக செயல்படுகிறார்கள் என்று பார்த்துவிட்டோமே பிறகென்ன? அனுமதி கிடைக்கும்.

இந்நிறுவனங்களின் நோக்கமே மூலதனத்தை பெருக்கி இலாபம் அடைந்து மீண்டும் மூலதனமாக்கி ஒரு சுழற்சியில் சுற்றித் திரிவதே. இலாபம் என்றால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதும், மக்களுக்கு இல்லாத தேவையை உற்பத்தி செய்வதும் (விற்றாக வேண்டும் அல்லவா!), தரம் குறைவான, எளிதில் காலாவதியாகக் கூடிய பொருட்கள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் ஒட்டுமொத்த மதிப்பைக் காட்டிலும் குறைவான கூலிக்கு அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்துதலும் தான்.

இதுவே பணியிடங்களில் நேரடி ஜனநாயகமோ, ஏன் பிரதிநிதித்துவ ஜனநாயகமோ செயல்படுத்தப் பட்டால்? அது தான் கூட்டுறவு முறை. நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்துதான் பணியாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் சுற்றுச்சூழல் மேல் அவர்களுக்கு அக்கறை இருக்கும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் காற்றை மாசு படுத்தியது போல், பெப்சிகோ நிறுவனம் தாமிரபரணியில் நீரை உரிஞ்சுவது போலுள்ள நிலை அவர்களாலேயே தடுக்கப்படும். இங்கே அனைவரின் தேவைக்காக நிறுவனம் இயங்க வேண்டும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மூலமாகவோ நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமென்றால் அதுவே கூட்டுறவு! அதுவே ஜனநாயகம்!