கூட்டுறவு என்றால் என்ன?

இந்த கேள்விக்கான பதிலை நேரடியாக தெரிவிப்பதைவிட, வரலாற்றில் கூட்டுறவு என்ற சிந்தனை ஏற்பட காரணம் என்ன என்பதை விளக்கினால் கூட்டுறவு என்றால் என்னவென்று எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கூட்டுச் செயல்பாடும், கூட்டமாக வாழ்வதும் தான் இன்று வரை இந்த இனம் அழியாமல் பல தலைமுறைகள் கடந்து வாழ உதவியிருக்கிறது. இன்றைய நவீன அறிவியல் உதவியில்லாத ஆதி மனிதன், இயற்கையின் இடர்பாடுகளிலிருந்தும், பிற மிருக உயிரினங்களிடமிருந்தும், தன் பசியிலிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்ள கூட்டமாக வாழத் தொடங்கினர். காரணம் அனைவருக்கும் இந்த அடிப்படைத் தேவையிருந்தது. குழுவாக, கூட்டமாகத் தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டனர்.

அப்படித்தான் இன்றும் நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அமைப்பாய் திரள்கிறோம். மரம் வளர்க்க, இயற்கை வளங்களைப் பாதுகாக்க, அரசியல் அங்கீகாரம் பெற என பல பல அமைப்புகளாய் நாம் திரள்கிறோம் அல்லவா! எனவே நம் பொதுவான தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வமாக ஒன்றிணைவதே கூட்டுறவு.

17-ஆம் நூற்றாண்டுகளில், நிலங்களை உடைமைகளாக வைத்திருந்தவர்களும், உற்பத்திக் கருவிகளை உடைமையாக வைத்திருந்தவர்களும் தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கினர். ஆங்காங்கே கிராமங்களில், சிறு சிறு குடிசை தொழில்கள் போல நடந்த உற்பத்தியை ஒரே இடத்தில் மையப்படுத்தி, உற்பத்தியின் திறனையும், அளவையும் பன்மடங்காக உயர்த்தி, அதனை இதுவரை கண்டிராத புதிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்று இலாபம் பார்க்க வேண்டும் என்ற வணிகர்களின் நோக்கம் தான் இது.

இதில் சுயதொழில், கைவினைப் பொருட்கள் செய்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலையில் குவிக்கப்பட்டு அன்று முதல் தொழிலாளர்கள் ஆனார்கள். தொழிற்சாலைக்கு வருவதற்கு முன்பு அவர்களின் உழைக்கும் நேரம், உழைப்பின் அளவு அனைத்தும் அவரவர்களே தீர்மானித்தது. இனி அது நிலைக்காது ஏனெனில் கூலிக்காக தொழிற்சாலையில் கூலி அடிமைகளானார்கள். குழைந்தைத் தொழிலாளர் முறை தொடங்கிய இடமும் இதுவே.

இங்கே இரண்டு தரப்பு மக்களை நம்மால் பார்க்க முடிகிறது. நிலம் மற்றும் உற்பத்திக் கருவிகளின் உடைமையாளர்களையும், இவ்விரண்டும் இல்லாத உழைக்கும் சக்திக் கொண்ட உடைமையற்றவர்களையும். உடைமையற்றவர்களுக்கு வேறு வழியில்லை இவர்களிடம் தங்கள் உழைக்கும் சக்தியை விற்றாக வேண்டிய நிலை. இந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கொடியதாக மாறியது. இன்று நாம் அனுபவிக்கும் 8 மணி நேரம் வேலை எல்லாம் அன்று அவர்களால் எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. ஒரு நாளில் 18 மணி நேரம் தொழிற்சாலையில் இயந்திரங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பர் கொத்தடிமைகளாக. இதைத் தான் சார்லி சாப்லின், “The Modern Times” என்ற தன்னுடைய திரைப்படத்தின் வாயிலாக நகைச்சுவையோடு காட்டியிருப்பார்.

வறுமையும், பசியும் இவர்களை வாட்டி வதைத்தன, போதாதற்கு நாடுகளுக்குள் போர்கள் வேறு. வேறு எந்த திறமைகளையும் வளர்த்துக்கொள்ள நேரமில்லாத கொடிய வாழ்வு. இது போன்ற காலக்கட்டத்தில் தான் பலரும் தங்கள் தேவைகளை கூட்டாக பூர்த்தி செய்ய பல முயற்சிகளை கையிலெடுத்தனர்.

அதில் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி தான் உலகின் முதல் கூட்டுறவான “Rochdale கூட்டுறவு” அக்டோபர் 24, 1844 அன்று துவங்கப்பட்டது. லண்டனில் உள்ள நகரித்தின் பெயர் தான் ரொச்டேல். அந்நகரில் துணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்த 28 நெசவாளர்கள் அவர்களின் குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள ஒன்றிணைந்து, அவர்களுக்கு தேவைப்படும் பொதுவான பொருட்களை மொத்தமாக ஒரு விலைக்கு வாங்கி (சம்பாத்தியத்தில் இருந்து அவரவர் பணம் கொடுத்து) அதனை ஒரு கிடங்கில் சேமித்து வைத்து, பின் இவர்களின் குடும்பங்களுக்கு, வாங்கியதை விட சற்று விலை உயர்த்தி விற்று தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டனர். இது ஒரே நாளில் நடந்துவிடவில்லை.

இதனை தொடங்கிய பொழுது இவர்களிடம் சேமிக்கும் கிடங்கு இல்லை. எனவே ஒரு வருடத்திற்கு தொடர்ந்து மாதாமாதம் பணத்தை சேமிக்கக் தொடங்கினர். சேமிப்பு ஒரு கட்டத்தை எட்டியதும், பொருட்களை சந்தையிலிருந்து கொள்முதல் செய்து கிடங்கிற்குக் கொண்டுவந்து சந்தையில் பிறர் விற்பதை விட குறைவான விலைக்கு இவர்கள் உறுப்பினர்களுக்கு விற்று தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனர். இந்த கூட்டுறவு முறைக்கு பெயர் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் (Consumer Cooperative).

இவர்களுக்கான கடையை இவர்களே உருவாக்கிக் கொண்டனர். அதற்கு மூலதனமான பணமும் இவர்களின் உழைப்பிலிருந்தே வந்த பணம், எனவே இவர்களே நிர்வகிக்கும் கடையாக இது மாறியது. ஆனால் நுகர்வோர் கூட்டுறவில் சில சிக்கல்கள் இருக்கிறது. இவர்கள் கொள்முதல் செய்யும் பொருட்களை விற்கும் முதலாளிகள் அதன் விலையை ஏற்றினாலோ அல்லது கிடங்கின் உரிமையாளர் வாடகையை உயர்த்தினாலோ இவர்களால் தடுக்க முடியாது. ஏனெனில் முதலாளித்துவ அரசில் இவையனைத்தும் சட்டப்படி செல்லும். இதென்ன நமக்கு புது செய்தியா என்ன?

  1. உற்பத்தி செய்து விற்பவர்களும் ஒரு கூட்டுறவு நிறுவனமாக இருந்தால்?
  2. நுகர்வோர் கூட்டுறவு தங்கள் தேவைகளை உற்பத்திக் கூட்டுறவுகளிடம் தெரிவித்து அதற்கேற்ப உற்பத்தியும் நுகர்வும் நடந்தால்?
  3. இதன் உறுப்பினர்கள் கூடி முடிவு ஜனநாயக முறையில் முடிவு செய்தால்?

அதுவே முதலாளித்துவத்திற்குள் தொழிலாளர்கள் முதலாளிகள் இல்லாத அமைப்பை உருவாக்கி, சுய-மேலாண்மை செய்துக் கொள்ள முடியும் என்ற முதல் அடி.

கூட்டுறவு முறைக்கு மாறிவிட்டால் இனி எல்லாம் சுகமே என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இனிதான் தொழிலாளி வர்க்கம் சுய-மேலாண்மையிலும், முதலாளித்துவச் சந்தையிலும் தன்னை தக்கவைத்துக் கொள்ள போராடுவதுடன், இந்த போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் (மூலதனத்தின் கட்டற்ற செயல்பாட்டை எதிர்த்து தான் இந்த போராட்டம்). இது மிகவும் சவால்கள் நிறைந்த பாதை.

கூட்டுறவுகள் தோன்றுவது மட்டும் போதாது, கூட்டுறவுகளுக்குள் கூட்டுறவு வேண்டும். அது விரிவடைய வேண்டும். எனவே தான் கூட்டுறவுகளை தொழிலாளி வர்க்கம் கீழிலிருந்து மேலாக கட்ட வேண்டும். அரசு நிர்வகிக்கும் எந்த ஒரு கூட்டுறவும் நாளடைவில் அதன் புரட்சிகர தன்மையை இழந்துவிடும். காரணம், இது ஒரு அரசு நடத்தும் தொழிற்சாலையாகவும், இதில் தாங்கள் பணிபுரிபவர்களாகவும், கூட்டுறவு என்ற சிந்தனையே மெல்ல அழியத் துவங்கிவிடும். இதுதான் இன்று தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் அவலமான நிலை.

பொருளாதாரம், சுற்றுச்சூழல், இயற்கை வளம், அதனைச் சார்ந்த மக்களின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, தாங்களே நிறுவனத்தை, உற்பத்தியை கட்டுப்படுத்தி, முடிவுகள் எடுத்து செயல்படுவதே புரட்சிகர கூட்டுறவாகும்.

உதாரணம்: ஸ்பெயின் நாட்டில் 100 கணக்கான கூட்டுறவுகள் ஒன்றிணைந்து Mondrogan Corporation என்ற ஒரு கூட்டுறவு சங்கமத்தை உருவாக்கி இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் ULCCS என்ற கட்டுமான தொழிலாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய கட்டுமானப் பணி கூட்டுறவு இன்று கிளைப் பரப்பி Information Technology Park ஒன்றை தங்களுக்கு சொந்தமாக கட்டியுள்ளார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கான வீடுகளும் உள்ளன. Uralungal Labour Technology Solutions (ULTS) என்ற IT நிறுவனமும் செயல்படுகிறது.

அதேபோல பெங்களூரில் Nilenso என்ற மென்பொருள் கூட்டுறவு நிறுவனமும் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியில் நாங்கள் Coopon-ஐ கட்டி எழுப்பும் ஜனநாயக கூட்டுறவில் நாட்டம் கொண்டுள்ளோம்.