Coopon Scitech Blog

Reader

Read the latest posts from Coopon Scitech Blog.

from prashere

தற்சமயம் “Cooperatives and Socialism – A View From Cuba” என்ற புத்தகத்தை படித்து வருகிறேன். 2011-ல் ஸ்பானிஷ் மொழியில் இது எழுதப்பட்டு பிறகு 2013-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கியூபாவில் புரட்சிக்கு பின் அதிகாரத்திற்கு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு சோசலிசத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று திட்டமிட துவங்கி, சேகுவேரா தொழில்துறையின் அமைச்சாரக பொறுப்பேற்ற பின் அமெரிக்க நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த தொழிற்சாலைகளை தேசிய உடைமையாக அறித்த பின் அவர்கள் முன் இருந்த மிகப்பெரிய சவால் மூலதனத்தின் ஆதிக்கத்தை கடந்து தொழிலாளர்களின் பங்களிப்போடு கூடிய புதிய சமூக உறவு முறைகளை சோதித்து கண்டறிவதே.

அன்று தொடங்கிய அவர்களின் பயணத்தின் ஊடாக இன்று கியூப நாட்டில் கூட்டுறவு முறை எப்படி இருந்து வருகிறது, என்ன மாற்றங்கள் நிகழ வேண்டும், என்ன தவறுகள் நிகழ்ந்துள்ளன, என்னென்ன வரம்புகள் சவாலாக இருந்துவருகின்றன போன்றவற்றை கியூபா உட்பட லத்தின் அமெரிக்க நாடுகளான வெனிசுவேலா, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் படிப்பினைகளிலிருந்தும், பொருளாதார முனைவர்கள், சமூகவியல் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட 20 நபர்கள் குழு இப்புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இப்புத்தகத்திலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் உள்ளது. கூட்டுறவு முறையை தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு குழுவும் கூட்டுறவு பற்றிய ஆழமான புரிதலும், பொருளாதாரம் குறித்த புரிதலும், தாங்கள் இயங்கும் துறையில் நிபுணத்துவமும் பெற்றிருத்தல் மிகவும் அவசியமாகிறது. இம்மூன்று தூண்களில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் கூட்டுறவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்படும். வரலாற்றில் அப்படி எங்கெல்லாம் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன போன்றவையும் இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான கூட்டுறவுகள் பற்றியும், அதில் குறிப்பாக உற்பத்தி சார்ந்த விவசாய கூட்டுறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து (ஏனெனில் இந்தியா போல கியூபாவும் விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நாடுதான்) எழுதப்பட்டுள்ளது. ஆயினும் பொதுவாக கூட்டுறவுகளின் மேலாண்மை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன். எனவே இதிலிருந்து நான் புரிந்துக்கொள்வதை, coopon-ல் இயங்கும் சக தோழர்களுக்கும் இவற்றை கற்பிக்கும் பொருட்டு நான் இங்கே எழுதுகிறேன்.

 
Read more...

from prashere

இந்தியாவில் நாம் பின்பற்றுவது பாராளுமன்ற ஜனநாயக முறை. இந்த ஜனநாயக முறையில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலிருந்து நமக்கான ஒரு பிரதிநிதியை தேர்தலில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இதற்கு மற்றோர் பெயர் தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracry). இதுவொரு நேரடியான ஜனநாய முறையல்ல, அதாவது நாம் நேரடியாக முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இல்லை, நம்மை முதன்மைப்படுத்தி செயல்படுவார் என்று ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் நோக்கம் வேறாக இருக்கும், நமக்கு எதிரானதாகவே கூட இருக்கும்.

ஆனால் அவர் எப்படி தேர்வாக முடிகிறது? தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பின் அதனை தேவைப்படும் நேரத்தில் நிறைவேற்றாமல், சுயலாபத்திற்காக நமக்கு எதிரானதாகவும், மூலதனம் அதிகம் படைத்தோருக்கு சாதகமாகவும் அவர் செயல்படுகிறார். 5 வருடத்திற்கு நம்மால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு (அதுவும் ஒடுக்கப்படும்) எந்த வழியும் இல்லாமல் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் மட்டுமே தனித்து இயங்கும் இடத்தில் அது எளிதில் ஜனநாயமற்ற தன்மைக்கு சென்றுவிடும் என்பது நாம் நன்கு உணர்ந்ததே! தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை தான், மாநில அளவிலும் சட்டச்சபை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாநில பிரதிநிதிகளை கேள்விக் கேட்டால் அவர்கள் நடுவண் (மத்திய) பிரதிநிதிகளை கைக்காட்டுவார்கள், அவர்களைக் கேட்டால் இவர்களைக் கைகாட்டுவார்கள். நாம் இவர்கள் மத்தியில் ஒரு கால்பந்தாகி விடுகிறோம். எனவே ஒரு அரசாங்கத்திடம் நாம் வெளிப்படைத் தன்மையை எதிர்ப்பார்க்கிறோம் அப்போது தான் யார்யாரெல்லாம் திருடர்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் மூலதனப் பிரதிநிதிகள் இதிலும் கில்லாடிகள் தான்.

சரி, ஒரு பக்கம் நாட்டையும், மாநிலத்தையும் நிர்வகிக்கும் முறை பெயரளவிலாவது ஜனநாயகம் என்றிருக்க, மறுபுறம் நாம் அனைவரும் பணிக்கு செல்லும் நிறுவனங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகிறது? நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. எப்படி வந்தது? யாரேனும் தேர்ந்தெடுத்தார்களா? இல்லை. தானே உருவாக்கிக் கொண்டது. சரி உருவாகும் போது பணியாளர்கள் இல்லை, எனவே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் ஆளில்லை போனாபோவுது என்றாலும், பணியாளர்களாக நாம் சேர்ந்த பின்னரும் கூட ஏன் அப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் முறை இங்கில்லை?

நாட்டை நிர்வகிக்கும் முறையின் குறுகிய முறை தான் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது என்றால், மாநிலத்தின் குறுகிய வடிவம் ஏன் மாநிலத்திற்குள் இயங்கும் நிறுவனங்களில் இல்லை? இன்னும் சுருக்கமாகக் கேட்டால் நாம் பணிபுரியும் நிறுவனங்களில் நமக்கு ஏன் ஜனநாயக உரிமைகள் இல்லை?

“வேலை செய்கிறாய், அதனால் உண்டாகும் செல்வத்தை விட குறைவான மதிப்புக்கே கூலியும் வாங்குகிறாய். அதை வாங்கிக் கொண்டு போக வேண்டியதுதான் உன் வேலை” என்று மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, அது இன்று மாநில, தேசிய தேர்தல்களிலும், ஓட்டுக்கு பணம் பெற்றுவிட்டு 5 வருடத்திற்கு போராட வேண்டிய நிலைக்குத் தான் நம்மை கொண்டுவந்து விட்டுள்ளது. ஜனநாயகத்தை தலைகீழாக நிற்கவைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினசரி தலையிடும் இடமாக பணியிடம் தான் இருக்கிறது. ஜனநாயகம் என்று ஏட்டளவில் இருந்து என்ன பயன்? அதை தினசரி வாழ்வியலில், வசிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் என எல்லா தளங்களிலும் பயிற்சி செய்தால் தானே அதை மக்கள் முதலில் புரிந்துக்கொள்ள முடியும்? புரிந்துக் கொண்டால் தானே அதிலுள்ள சாதக பாதகங்களை உணர முடியும்? அப்போது தானே மாநிலத்திலும், தேசிய அளவிலும் ஜனநாயகத்தை மக்கள் கையிலெடுக்க முடியும்? இவை இல்லாம இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போலிப் பெருமை நமக்கெதற்கு? இங்கு இருப்பது போலி ஜனநாயகம், மூலதனத்தின் கட்டற்ற செய்லபாடு.

அது நிர்வாகத்திற்கு மட்டும் கேடல்ல, ஒட்டுமொத்த இயற்க்கைகும் கேடாகிறது, நம் இருத்தலையே அது கேள்விக்குள்ளாகுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இயற்கையிலிருந்து தான் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை எடுக்கிறது. இந்நிறுவனங்கள் இவற்றை எடுக்கும் முன் அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும். அதான் அரசாங்க பிரதிந்திநிகள் யாருக்கு சாதகாமாக செயல்படுகிறார்கள் என்று பார்த்துவிட்டோமே பிறகென்ன? அனுமதி கிடைக்கும்.

இந்நிறுவனங்களின் நோக்கமே மூலதனத்தை பெருக்கி இலாபம் அடைந்து மீண்டும் மூலதனமாக்கி ஒரு சுழற்சியில் சுற்றித் திரிவதே. இலாபம் என்றால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதும், மக்களுக்கு இல்லாத தேவையை உற்பத்தி செய்வதும் (விற்றாக வேண்டும் அல்லவா!), தரம் குறைவான, எளிதில் காலாவதியாகக் கூடிய பொருட்கள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் ஒட்டுமொத்த மதிப்பைக் காட்டிலும் குறைவான கூலிக்கு அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்துதலும் தான்.

இதுவே பணியிடங்களில் நேரடி ஜனநாயகமோ, ஏன் பிரதிநிதித்துவ ஜனநாயகமோ செயல்படுத்தப் பட்டால்? அது தான் கூட்டுறவு முறை. நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்துதான் பணியாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் சுற்றுச்சூழல் மேல் அவர்களுக்கு அக்கறை இருக்கும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் காற்றை மாசு படுத்தியது போல், பெப்சிகோ நிறுவனம் தாமிரபரணியில் நீரை உரிஞ்சுவது போலுள்ள நிலை அவர்களாலேயே தடுக்கப்படும். இங்கே அனைவரின் தேவைக்காக நிறுவனம் இயங்க வேண்டும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மூலமாகவோ நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமென்றால் அதுவே கூட்டுறவு! அதுவே ஜனநாயகம்!

 
Read more...

from prashere

coopon பெயர் காராணம் என்னவென்றால், ஒரு முறை கேரளாவில், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் நாங்கள் பங்கெடுத்தோம். ஆசிய, ஐரோப்பிய கண்டங்களின் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு கூட்டுறவுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பத் தளத்தில், மென்பொருள் உற்பத்தி துறையில் கூட்டுறவுகள் வளர வேண்டும் என்ற காரணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Coopathon (hackathon for cooperatives) நிகழ்ச்சியும் இருந்தது. இதில் அணிகளாக தான் பங்கேற்க வேண்டும். 6 பேர் கொண்ட அணியாக கமல், கணேஷ், ராகுல், மணிமாறன், மணிராஜ் ஆகியோருடன் நானும் கலந்துக்கொண்டேன். இதில் ஒவ்வொரு அணியும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தங்களுக்கோர் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி யோசித்த போது வந்த பெயர் தான் coopon, அதாவது, cooperative-லிருந்து “coop”, pondicherry-லிருந்து “pon” சேர்ந்து coopon ஆனது. coopon-ஐ தமிழில் எப்படி அழைப்பது அல்லது எழுதுவது? கூப்பான்? அல்லது கோ-ஆஃப்பான்? கணேஷ் எப்போதும் இரண்டாவது முறையையே பயன்படுத்துமாறு கூறுகிறார். காரணம், தமிழத்தில் ஆடைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும் கூட்டுறவு நிறுவனம் Co-opTex என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை கோ-ஆஃப்டெக்ஸ் என்று Cooperative-ஐ எழுதுவது போல எழுதுவதே சரி என்றும் கோ-ஆஃப் என்பது Co-op-ஐ குறிக்கிறது, கூப், coop-ஐ குறிக்கிறதா அல்லது coup-ஐ குறிக்கிறதா என்ற தெளிவின்மை உள்ளது என்று கணேஷ் கூறினார்.

எனினும் நானும் மீதமுள்ளவர்களும் தொடர்ந்து கூப்பான் என்ற வழக்கத்தையே பின்பற்றி வருகிறோம். பெயர் காரணத்தில் தெளிவு உள்ளது போல் உச்சரிப்பதிலும் தெளிவு இருந்தால் நல்லது என்று தான் எனக்கும் தோன்றுகிறது. எனவே நானும் இனி கோ-ஆஃப்பான் என்றே பயன்படுத்த விரும்புகிறேன்.

இப்பெயரில் இந்நிறுவனத்தை மத்திய அமைச்சகத்திடம் பதிவு செய்ய முயற்சித்த போது, இப்பெயர் வேறு சில நிறுவனங்களின் பெயர் போல் உள்ளது என்று நிராகரித்து பெயர் மாற்றத்திற்கு 3 மாதங்கள் கெடுவிதித்தனர். அப்போது கமல் மற்றும் கணேஷ் முன்மொழிந்த மற்றுமோர் அருமையான பெயர் THIRAL என்பது. திரள் தமிழ் வார்த்தை, ஒன்று சேர், ஒருமைப்பாடு என்பதைக் குறிக்கும் ஒரு சொல். பெயரில் ஒரே ஒரு வார்த்தை இருந்தால் மீண்டும் வேறு நிறுவனத்தின் பெயரைக் காரணம் காட்டி நிராகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய கமல், அதனோடு SciTech (Science & Technology) என்ற வார்த்தையை நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனைக் கூறினான்.

அதற்கு பின் நடந்த கல்ந்துரையாடலில், கோ-ஆஃபான் என்ற பெயரில் தான் நாம் சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் மாநாட்டில் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் பரிசையும் வென்றோம். எனவே அப்பெயர் ஓர் அடையாளமாக ஏற்கனவே மாறிவிட்ட காரணத்தால் coopon SciTech என்று பெயரை பதியலாம் என்று முடிவு செய்து, தற்போது இறுதிக்கட்ட பதிவுகளில் உள்ளோம்.

கூடிய விரைவில் coopon SciTech LLP. யாக இந்நிறுவனம் உருபெறும்.

 
Read more...

from prashere

You can expect this post to be developed soon. For now, I would like to know how it appears here and in fediverse.

 
Read more...